Preloader

காவடித் தூக்குதல் பிரார்த்தனையின் தொடக்கம்

காவடித் தூக்குதல் பிரார்த்தனையின் தொடக்கம்

ஸ்ரீ முருகனுக்குப் பல்வேறு வகைகளில் பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் காவடி தூக்குதல். காவடி  தூக்கும் பிரார்த்தனை எப்போது தோற்றம் கண்டது?

முன்பு பொதிகை மலையில் அகஸ்திய மாமுனிவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது தமது சீடர்களில் ஒருவரான இடும்பனை கைலாய மலைக்குச் சென்று அங்கு முருகனுக்குச் சொந்தமான இரட்டை மலைகளான சிவகிரி, சப்தகிரி இரண்டையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

குருவின் கட்டளைக்கு இணங்க, இடும்பன் கைலாய மலைக்கு வந்து, அங்குள்ள அந்த இரு மலைகளையும் கட்டி, தோளுக்கு ஒரு மலையாக தமது இரு தோள்களில் சுமந்துச் சென்றார்.

முருகனுக்கோ வேறு எண்ணம் இருந்தது. அவர் அந்த இரு மலைகளை திருவாவினன்குடியில் (பழனி) வைக்கத் திட்டமிட்டிருந்தார்.  அதே வேளையில் இடும்பனின் பக்தியைச் சோதிக்கவும் அவரது பெருமையை உலகுக்குப் பரப்புவதும் அவரது நோக்கமாக இருந்தது.

தோள்களில் மலைகளைச் சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்த இடும்பன் தனது வழியை மறந்துவிட்டார். அந்த வழியே செல்லும் ஓர் அரசனாகத் தோன்றிய முருகன், தான் வழிகாட்டுவதாகச் சொல்லி இடும்பனை திருவாவினன்குடிக்கு (பழனி) அழைத்துச் செல்கிறார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாம் என்று முருகன் கூற, இடும்பன் தான் சுமந்து வந்திருக்கும் இரு மலைகளையும் தனது தோளிலிருந்து இறக்கி வைக்கிறார்.

            இளைப்பாறிய பிறகு, அந்த மலைகளை மீண்டும் தூக்குவதற்கு முயன்ற இடும்பன் அதிர்ச்சியுற்றார்.  மலையைச் சிறிதும் அசைக்க முடியவில்லை. களைத்துப் போன இடும்பன், அந்த இரு மலைகளில் ஒன்றின் உச்சியில் கோவனத்துடன் சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். அந்தச் சிறுவனைக் கீழே வரும்படி இடும்பன் கூறினார். ஆனால், சிறுவனோ மலை தன்னுடையது, இறங்க முடியாது என்று சொல்லி விட்டான். கோபம் கொண்ட இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்று தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார். அந்தச் சிறுவன்தான் முருகன் என்று உணர்ந்த இடும்பன் உளமுருக சிறுவனை வணங்கினார். தான் இரு மலைகளைச் சுமந்து வந்தது போல யாரேனும் ஒரு கோலின் இருபுறங்களிலும் திவ்ய பொருட்களைத் தோளில் சுமந்து வந்தால், அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான வரத்தை முருகனிடம் பெற்றார் இடும்பன்.  மேலும் சந்தனம், பால், மலர்கள் போன்ற திவ்ய பொருட்களைக் காவடியாகச் சுமந்து வரும் பக்தர்களின் குறைகளை தான் தீர்த்து ஆசீர்வதிப்பதாகவும் தெரிவித்தார் முருகப் பெருமான். இப்படியாகத்தான் காவடி தூக்கும் பிரார்த்தனை தொடங்கியது.

அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் பிரதான சன்னதிக்குப் பக்கத்தில் இடும்பனுக்காக ஒரு சிறிய சன்னதி அமைக்கப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள்.  தைப்பூசப் பிரார்த்தனையைச் செலுத்திய மூன்றாவது நாளில் காவடியைத் தூக்க நல்லாசி வழங்கிய இடும்பனை வணங்கி பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிப்பார்கள்.

காவடி

மிக எளிய அளவிலான காவடியில், ஒரு கோலின் இரு ஓரங்களையும் இணைக்கும் மரத்தினால் ஆன ஒரு வளைவு இருக்கும். முருகப் பெருமானின் உருவப் படங்கள் காவடியின் இரு புறங்களிலும் மாட்டப்பட்டு, காவடிக்கு அழகு சேர்க்க மயில் இறகுகள் இணைக்கப்பட்டு, காவடியின் இரு புறங்களிலும் பால்குடங்கள் பொறுத்தப்படுகின்றன.

இதைத் தவிர, பெரிய காவடிகளும் உண்டு. அழகுக் காவடி, ரதக் காவடி என இரு வகைகள் தைப்பூசத்தில் பக்தர்கள் தூக்கும் பெரிய காவடிகளில் வழக்கமானவை. அத்தகைய காவடியில் உள்ள நீண்ட மெல்லிய இரும்புக் கம்பி, ஊசிகள் உள்ள சங்கிலிகள் காவடி எடுப்பவரின் உடலில் குத்தப்படும். காவடி எடுப்பவர் முருகனுக்காகச் செலுத்தப்படும் காவடியாக மட்டும் அது காட்சியளிப்பதில்லை. மாறாக, அது கடவுளின் நகரும் சிறிய சன்னதியாகவும் காட்சியளிக்கிறது.

காவடி தூக்கும் பக்தர்கள் உடல் அளவிலும் மனத்தளவிலும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள கடும் விரதம் எடுக்கிறார்கள். மது, மாது, மாமிசத்தை ஒதுக்கி, எளிய சைவ உணவை உட்கொண்டு எப்போதும் கடவுள் சிந்தனையுடன் அவர்கள் இருக்கிறார்கள். சிலர் தைப்பூசத்துக்கு முன் 48 நாட்களுக்கு விரதம் இருந்து காவடிப் பிரார்த்தனையைச் செலுத்துகின்றனர்.

தோல், நாக்கு, தாடை ஆகியவற்றில் வேலைக் குத்துவது பொதுவாகக் காணப்படும் வழக்கம். தாடையிலும், நாக்கிலும், குத்தப்படும் அழகு, காவடி எடுக்கும் பக்தர்கள் பேசுவதைத் தடுத்து தெய்வச் சிந்தனையைக் கட்டிக் காக்கிறது.

 


பதிவிறக்கம் செய்ய
Print Friendly, PDF & Email
Facebook
Facebook
YOUTUBE
Instagram